
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் இருப்பதைக் கண்டித்து ரேசன் கடைகளை முற்றுகையிட்டு திமுக நடத்திய போராட்டத்தால் 3 ஆயிரத்து 33 பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டனர்.
ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்காமல் இருப்பதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ரேசன் கடைகள் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி ஊட்டி, குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள 194 ரேசன் கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஊட்டி அப்பர் பஜார், மெயின்பஜார், சூப்பர் மார்க்கெட், காந்தல் உள்ளிட்ட பல்வேறு ரேசன் கடைகளை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி மார்க்கெட் ரேசன் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.கணேஷ், மற்றும் திமுக. தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு நிறுவன ரேசன் கடை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். இதில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுமந்து, எமரால்டு, தேனாடுகம்பை பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஊட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன் தலைமை வகித்தார். மஞ்சூர், எடக்காடு, எமரால்டு, மு.பாலாடா, பாலக்கொலா உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 400 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மேலூர் ஒன்றிய திமுக சார்பில் கொலக்கம்பை, அதிகரட்டி, கொல்லிமலை, தாம்பட்டி, கிளிஞ்சாடா, சட்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் தூதூர்மட்டம், ஆரூகுச்சி, உலிக்கல், மேலூர், கரும்பாலம், சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஒன்றிய செயலாளர் தேவன், ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் மயில்வாகணம், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பழகன், பாலன், முருகபாண்டியன் உள்பட 178 திமுகவினரை காவலாளர்கள் கைது செய்தனர்.
கூடலூர் நகரில் உள்ள 20 ரேசன் கடைகளில் போராட்டம் நடத்திய நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தொ.மு.ச. போக்குவரத்து செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட 327 பேர் கைது செய்யப்பட்டனர்.
மசினகுடியில் உள்ள 4 ரேசன் கடைகளில் போராட்டம் நடத்தியதாக 33 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
இதேபோல் ஓவேலி பேரூராட்சி பகுதியில் உள்ள 7 ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தியதாக 98 பேரையும், நடுவட்டம், டி.ஆர்.பஜார் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் போராட்டம் நடத்தியதாக 40 பேரையும், பைக்காராவில் 38 பேரும், தேவர்சோலை பகுதியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக 111 திமுகவினரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பந்தலூர் மார்க்கெட் ரேசன்கடை முன்பு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி தலைமையிலும், ஏலமன்னாவில் நெல்லியாளம் திமுக நகர செயலாளர் காசிலிங்கம் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் நெல்லியாளம், கொளப்பள்ளி, அய்யங்கொல்லி, சேரம்பாடி, நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தேவாலா காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல், ஆய்வாளர் ஞானரவி ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 746 பேரை கைது செய்தனர்.
ஆக மொத்தம், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ரேசன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏ. உள்பட 3 ஆயிரத்து 33 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
திமுகவினரின் இந்த போராட்டத்தால் பல இடங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.