மின் கம்பியை மிதித்து விவசாயி இறப்பு; எஜமானுக்கு ஆபத்து என்று மின்கம்பியை கவ்விய நாயும் உடன் பலி...

First Published Jul 4, 2018, 8:30 AM IST
Highlights
Farmer death by current shock dog bite current wire and died also


மதுரை
 
மதுரையில் மின்கம்பியை மிதித்து விவசாயி பலியானார். எஜமானுக்கு ஆபத்து என்று மின்கம்பியை வாயில் கவ்விய நாயும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கல்கொண்டான்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் மொக்கொசு (70). விவசாயியான இவர் நேற்று காலை ஊருக்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் தனது மாட்டை மேய்ச்சலுக்காக, தான் வளர்க்கும் நாயுடன் ஓட்டிச் சென்றார்.

நேற்று முன்தினம் உசிலம்பட்டி பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் தோட்டத்தின் வழியாக செல்லும் மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. இதனை சற்றும் கவனித்திராத மொக்கொசு மாட்டை பிடித்தபடி மின் கம்பியை மிதித்துவிட்டார். அதில் மின்சாரம் இருந்ததால் மொக்கொசு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கையில் பிடித்திருந்த மாடும் அங்கேயே செத்தது. 

இந்த நிலையில், மொக்கொசின் நாய் தன்னுடைய உரிமையாளருக்கு ஆபத்து என்று எண்ணி மின்கம்பியை வாயில் கவ்வி பிடித்து இழுத்தது. இதில் மின்சாரம் தாக்கி நாயும் சம்பவ இடத்திலேயே பலியானது. 

இதுகுறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். 

உத்தப்பநாயக்கனூர் காவல் உதவி ஆய்வாளர் சிவாஜிகணேசன் வழக்குப் பதிந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், "இந்தப் பகுதியில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அமைத்து பல வருடங்களாகிவிட்டது. எனவே, பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளது. லேசாக காற்று அடித்தாலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்துவிடுகிறது. இதனால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார். 

click me!