தேர்வும் ஒரு போர்க்களம் தான்.. துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் - பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை..!

By vinoth kumarFirst Published Jan 17, 2023, 3:16 PM IST
Highlights

போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு பல முனைகளில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, தேர்வு என்பது வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிப்பதாகவும், தேர்வில் தோற்றால் அனைத்தும் முடிந்து விட்டது என்று மாணவர்கள் நினைக்கிறார்கள்.

வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் துணிவுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். பண்டிகைகளை எப்படி நாம் கொண்டாடுகிறோமோ, அதுபோல தேர்வுகளையும் கொண்டாட வேண்டும் என பரீட்சைக்கு பயமேன் புத்தகத்தில்  பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பரீட்சைக்கு பயமேன் புத்தகத்தில்  பிரதமர் நரேந்திர மோடி மாணவச் செல்வங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள்: போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு பல முனைகளில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே, தேர்வு என்பது வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிப்பதாகவும், தேர்வில் தோற்றால் அனைத்தும் முடிந்து விட்டது என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வாழ்வில் எல்லா காலகட்டங்களிலும் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தோல்வியைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. தோல்வியை கடந்து வந்தால் தான் வெற்றி என்பது சாத்தியமாகும். எனவே, வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் மாணவர்கள் துணிவுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். பண்டிகைகளை எப்படி நாம் கொண்டாடுகிறோமோ, அதுபோல தேர்வுகளையும் கொண்டாட வேண்டும். அப்படியொரு கொண்டாட்ட மனநிலைக்கு மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்வுக்கு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு செல்ல வேண்டும். தேர்வும் ஒரு போர்க்களம் தான். எனவே மாணவர்கள் ஒவ்வொருவரும் மாவீரர்கள். எனவே மாவீரனாய் தேர்வு அறைக்குள் செல்ல  வேண்டும். அறிவாற்றல் என்பது நிலையானது அதனை வளர்த்துக் கொள்ள வேண்டியது தான் நாம் செய்ய வேண்டிய வேலை. மாணவர்கள் தனக்கு தானே போட்டி போட வேண்டுமே தவிர, மற்றவர்களை போட்டியாக நினைத்து பொறாமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அது நம்மை வீழ்த்தி விடும்.

நேரத்தை திட்டமிட்டு தேர்வுக்கு தயாராக வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எதையும் தள்ளி போடாமல், 'நிகழ்காலம் என்பது கடவுளின் அருட்கொடை' அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். அதனை பயன்படுத்திக்கொண்டு தேர்வுக்கு தயாராக வேண்டும். உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு விளையாட்டும், உறக்கமும்  முக்கியம்.  நேரத்துக்கு சாப்பிட்டு, தினமும் விளையாடி, சரியாக உறங்கினால்  தான் உடலும், மனமும் வலிமை பெறும். புத்துணர்ச்சியாக இருக்க முடியும். அப்போதுதான் வெற்றிகரமாக தேர்வை எழுத முடியும்.

அனைத்து பாடங்களை திரும்பத் திரும்ப படைத்து அதில் நிபுணத்துவம் பெற வேண்டும். அப்போதுதான் தேர்வில் எதையும் மறக்காமல் எழுத முடியும். ஒரு விஷயத்தில் நிபுணத்தும் பெறும் போது நம்மை அறியுமா நமக்குள் சக்தி பிறக்கும். சிறியசிறிய விஷயங்களில் கூட கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் காப்பியடிப்பது என்பது கூடவே கூடாது. அது நம் குண நலன்களை மாற்றிவிடும்.  பிரதமரின்  இந்த வழிகாட்டுதலை ஏற்று மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஜனவரி 27-ம் தேதி நடக்கவுள்ள மாபெரும் கலந்துரையாடல் நிகழ்வில், அனைத்து பள்ளிகளும், அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும். இது அரசியல் சார்பற்ற, முழுக்க முழுக்க மாணவர்களின் நலன்களை மட்டுமே மையமாகக் கொண்ட நிகழ்ச்சி. எனவே, இதற்கு அனைத்துத் தலைப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

click me!