காவல்துறை அதிகாரியாக தான் செயல்பட்ட பொழுது, தனது உயிரை பல முறை காப்பாற்றிய தன் சக அதிகாரிகளுக்கு தன்னுடைய நன்றிகளை உரித்தாக்குவதாக சைலேந்திரபாபு கூறினார்.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு துறையின் டிஜிபியாக பதவியில் இருந்தவர் தான் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு. இன்றோடு (30-06-2023) அவர் ஓய்வு பெற்ற நிலையில், இன்று மதியம் 1:30 மணி அளவில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவி ஏற்று கொண்டார்.
முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விழாவில் பேசிய அவர், 96 வயது நிரம்பிய தனது தாய் தற்போது தான் பேசிக் கொண்டிருப்பதை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார் என்று கூறி, அவருக்கு இந்நேரத்தில் நான் சலூட் செய்ய விரும்புகிறேன் என்று கூறி கண்கலங்கி நின்றார்.
இதையும் படியுங்கள் : அன்புள்ள இறையன்பு.. முதல்வர் ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதம்
சுமார் 36 ஆண்டு காலமாக அவர் தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தில் துப்பாக்கிச் சூடுகளோ, பெரிய அளவில் கலவரங்களோ இல்லை என்றும். போதைப் பொருள் ஒழிப்பு பணிகளில் தமிழக போலீசார் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு காவல்துறை அதிகாரியாக தான் செயல்பட்ட பொழுது தனது உயிரை பல முறை காப்பாற்றிய தன் சக அதிகாரிகளுக்கு தன்னுடைய நன்றிகளை உரித்தாக்குவதாக சைலேந்திரபாபு கூறினார். தமிழகத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு படையிலும் தான் பணியாற்றியுள்ளதாகவும், அதில் தன்னோடு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
தனது நண்பர்கள், மனைவி, குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று கண்ணீர் மல்க பேசி விடை பெற்றார் சைலேந்திரபாபு.
இதையும் படியுங்கள் : பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி - நேரில் சந்தித்து உதவிய முதல்வர் ஸ்டாலின்!