
வாழப்பாடி:
சேலத்தில், மனைவியிடம் சேட்டை செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். சேட்டை செய்துவிட்டு தப்பி ஓடிய ஒன்பது பேரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
சேலம், வாழப்பாடி அருகே கவர்கல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அங்கு, வெள்ளாளகுண்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (24) என்பவர், அப்பள்ளி மாணவியான தன் அக்காள் மகள் அழைப்பின்பேரில், மனைவி சுஷ்மிதாவுடன், பார்வையாளராக விழாவிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, பின்வரிசையில் அமர்ந்திருந்த, கவர்கல்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் பிரவிந்த்ராஜ் (20), பிரவீன்குமார் (22), சந்தோஷ்குமார், கார்த்திக் ஆகியோர், சுஷ்மிதாவிடம், சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதை தட்டிக்கேட்ட சத்தியமூர்த்தியை அந்த வாலிபர்கள் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து தனது உறவினர்களான மாயக்கண்ணன் (25), சிவக்குமார் (25), விக்னேஷ்வரன் (25), கோபால் (22), நெய்யான், கண்ணன், ரஞ்சித் ஆகியோரிடம் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, சேட்டை செய்த பிரவீன்குமார், பிரவிந்த்ராஜ் மற்றும் சின்னப்பிள்ளை (50) ஆகியோரை அடித்துத் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து சேட்டை செய்தவரின் குழுவில் இருந்த சின்னப்பிள்ளை முந்திக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், சத்தியமூர்த்தி, மாயக்கண்ணன், சிவக்குமார், விக்னேஷ்வரன், கோபால் ஆகியோரை நேற்று, வாழப்பாடி காவலாளர்கள் கைது செய்தனர்.
சுஷ்மிதாவும் தன்னிடம் சேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது புகார் கொடுத்தார். ஆனால், பிரவிந்த்ராஜ், பிரவீன்குமார், சந்தோஷ்குமார், கார்த்திக் உள்பட ஒன்பது பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாழப்பாடி காவலாளர்கள் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.