
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 7 பேர் அதிமுக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்ப்டடுள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக சேர்க்க கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரையும் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
ஈரோடு புறநகர் மாவட்டம் நம்பியூர் வடக்கும் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருந்த கே.ஏ.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பதவியில் இருந்து எம்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ். அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு என்ற மருதமுத்து ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.மோகன் குமாரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுதான் 7 பேர் என்றும் நேரம் செல்ல செல்ல பட்டியல் நீளும் எனவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் நீக்கத்திற்கு செங்கோட்டையன் நன்றி தெரிவத்துள்ளார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன் எனவும் தன்னை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியே என்றும் அவர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த விவகாரத்தில் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.