
Edappadi Palaniswami Announces Rs. 2,500 To Be Given For Pongal: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் இப்போதே மக்களை சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
மக்களிடம் ஆதரவு திரட்டும் எடப்பாடி பழனிசாமி
தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக அரசில் சட்டம், ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, திமுக அமைச்சர்களின் ஊழல் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி வருகிறார். விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோருக்கு திமுக அரசு துரோகம் செய்வதாக பேசி வருகிறார். இந்நிலையில், தஞ்சாவூர் தஞ்சாவூர் ஒரத்தநாடு தொகுதியில் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பொங்கல் பரிசாக ரூ.2,500
அப்போது பேசிய அவர், ''அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும். தீபாவளி பண்டிகையின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் இனி ஏழைகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் உயர்த்தப்படும் என்று கூறினார்கள். செய்தார்களா? கேஸ் சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். மானியம் கொடுத்தார்களா?
திமுக அரசை தாக்கிய இபிஎஸ்
இதேபோல் மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும் திமுக அதனை நிறைவேற்றவில்லை. இப்படி பித்தலாட்டம் செய்யும் திமுக ஆட்சிக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுக்கும். முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் எங்களுக்கு மக்கள் எழுச்சி இருக்கிறது. திமுக 200 இடங்களில் வெல்லும் என கூறுகிறார். ஓரத்த நாட்டில் கூடியுள்ள மக்கள் எழுச்சியை பாருங்கள் ஸ்டாலின். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்'' என்று தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகிக்கும்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தேர்தல் அறிக்கையே வெற்றி பெற முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் பொங்கள் பரிசு ரூ.2,500, தீபாவளிக்கு சேலை என அறிவிப்புகளை அள்ளித் தெளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே பொங்கலுக்கு ரூ.2,5000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.