
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை பாரத் (36). கேட்டரிங் முடித்துள்ளார். இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் சென்னையில் உள்ள ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்ததால் குடும்பத்துடன் தாம்பரத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பாரத் வந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் 2வது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது சாலை நடுவே போடப்பட்டிருந்த தென்னை மட்டைகள் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் பாரத் கீழே விழுந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் ஓடி வந்து பாரத்தை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்தனர். சம்பவ இடத்தில் சரிந்த பாரத் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட மனைவி மற்றும் மகளும் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சஞ்சய்(21) என்பவரை போலீசார் பாணியில் விசாரணை நடத்தியதில் பாரத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து சஞ்சய் போலீசாரிடம் பகீர் வாக்குமூலத்தை அளித்தார். அதில், சஞ்சய் என்கிற திருமூர்த்திக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருந்து வந்தள்ளனர். இந்த விஷயம் பாரத்துக்கு தெரியவர இருவரையும் கண்டித்தது மட்டுமல்லாமல் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் பாரத்தை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடைக்கு செல்லலாம் என மனைவி அழைத்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி சாலையில் தென்னை மட்டைகளை போட்டு வைத்துவிட்டு மறைவாக கத்தியுடன் சஞ்சய் தயாராக நின்றிருந்தார். அவ்வழியாக வந்த பாரத், தென்னை மட்டை மீது மோதி கீழே விழுந்தபோது சஞ்சய் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். முதலில் விபத்து என்று சித்தரிக்கப்பட்ட நிலையில் சஞ்சயை பார்த்த பாரத்தின் மகள், கொலை செய்த சஞ்சயை கையை காட்டியுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறது என விசாரணை நடைபெற்று வருகிறது.