
Mayiladuthurai DSP Sundaresan: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக இருந்தவர் சுந்தரேசன். நேர்மையான அதிகாரி என பெயரடுத்த இவர் சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன்
மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் கார் உயரதிகாரிகளால் பறிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் நடந்து பணிக்கு சென்றதாகவும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து வெளிப்படையாக பேசிய டிஎஸ்பி சுந்தரேசன் தான் நேர்மையாக இருப்பதால் அதிகாரிகள் தன்னை பழிவாங்குவதாக தெரிவித்தார். ஆனால் டிஎஸ்பியின் இந்த குற்றச்சாட்டுகளை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார். சுந்தரேசன் கூறிய தகவல் அனைத்தும் தவறானவை என்று அவர் கூறியிருந்தார்.
சுந்தரேசன் மீது அடுக்கடுக்கான புகார்
இதன்பின்பு சுந்தரேசன் மீது காவல்துறை சார்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டிஎஸ்பி சுந்தரேசன் 2005 - 2006 வரை நந்தம்பாக்கத்தில் பணிபுரிந்தபோது வழக்கு ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை, வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்தது, துரைப்பாக்கம் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூ.3000 வாங்கியது, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது பெண்ணிடம் புகார் வாங்காமல் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பழகி வந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
பணியிடை நீக்கம்
இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக பேசிய சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் செல்வம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். செல்வம் வெளியிட்ட வீடீயோ பதிவில், ''2009ல் இருந்து 2012 வரை டிஎஸ்பி சுந்தரேசன் ஐயா ஜே சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அவரிடம் நான் ஓட்டுனராக இருந்தேன்.
டிஎஸ்பிக்கு ஆதரவாக பேசிய காவலர்
காவல்துறையில் உண்மையானவர்கள் கிடைப்பது பெரிய விஷயம். ஆனால் சுந்தரேசன் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தார். ஹோட்டலில் காசு கொடுத்து தான் சாப்பாடு வாங்கி வர சொல்வார். சொந்த பணத்தை தான் செலவு செய்வார். கையூட்டு வாங்கவே மாட்டார். உண்மையாக இருப்பதால் கொஞ்சம் கோவமாக பேசுவார். சிங்கம் என்றாலே என்றைக்கும் சீற்றம் இருக்கதானே செய்யும். நேர்மையாக இருந்ததால் பல்வேறு இடங்களில் தூக்கி தூக்கி அடிக்கப்பட்டார்.
ஆயுதப்படைக்கு மாற்றம்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு பிரிவில் யாரும் செய்யாத சாதனையே செய்துள்ளார். அவரை இந்த அரசு கவனிக்காத விட்டாலும் பரவாயில்லை கடவுள் கண்டிப்பாக அவர் பக்கம் இருப்பார். உண்மை ஜெயிக்கும். அவர் வெல்வார்'' காவலர் செல்வம் கூறியிருந்தார். இந்த வீடியோ பதிவுக்கு தான் காவலர் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.