
Will the AIADMK-BJP alliance succeed?: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை தக்க வைக்க தயாராக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணி
ஆனால் இந்த கூட்டணி அமைந்தது முதல் பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தமிழ்நாட்டை விரோத போக்குடன் நடத்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டதாகவும், அதிமுக என்பது வெறும் பெயருக்கு தான். முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் அமித்ஷா தான் எடுப்பார் என திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
ஊசாலாடும் கூட்டணி ஒருபக்கம்
இது ஒருபக்கம் இருக்க, அமித்ஷாவும், அதிமுகவை மறைமுக எதிர்த்து வரும் அண்ணாமலையும் மறந்தும் கூட ஈபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை சொல்லவில்லை என்பது அதிமுக தொண்டர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்த ஈபிஎஸ், ''ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல'' என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
வெற்றிக் கூட்டணியாக அமையுமா?
பல்வேறு விமர்சனங்களை தாண்டி இந்த கூட்டணி தாக்குப்பிடித்தாலும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக அமையுமா? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. ஏனெனில் நீட் தேர்வு, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர மறுத்தல் என பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ளதாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுக, பாஜக கூட்டணியின் ஆயுதம்
இந்த கருத்துகள் தமிழக மக்கள் மனதில் ஆழமாக பதியப்பட்டு வரும் நிலையில், அதிமுக, பாஜக கூட்டணிக்கு இது பின்னடைவாக அமையலாம். அதே வேளையில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு அமைச்சர்கள் சொத்து குவிப்பு, ஊழல் வழக்கில் சிக்கியுள்ளனர். இவற்றையெல்லாம் அதிமுக, பாஜக கூட்டணி ஆயுதமாக எடுக்கலாம்.
திமுக மீது மக்கள் அதிருப்தி
இது தவிர எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்த ஆட்சி முடியும்போது மக்களிடம் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்யும். அந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக அதிமுக, பாஜக கூட்டணி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். பாஜக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக மீதே மக்களின் கவனம் முழுவதும் இருக்கும்.
அதிமுக அளிக்கும் தேர்தல் அறிக்கை
அதாவது அதிமுக அளிக்கும் தேர்தல் அறிக்கை, இலவச திட்டங்கள், பெண்களுக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மக்களை கவர்ந்திழுக்கும். இந்த விஷயத்தில் அதிமுக, பாஜக கூட்டணி கவனம் செலுத்தினால் அதிக வாக்குகளை அறுவடை செய்யலாம். மேலும் கொங்கு மண்டல பகுதிகளில் இந்த கூட்டணி வலுவாக இருப்பதும் ஒரு சாதகமான அம்சம் தான். மேலும் இந்த கூட்டணியில் தவெக, நாம் தமிழர், விசிக ஆகியவற்றில் சில கட்சிகள் இணைந்தாலும் வாக்கு சதவீதம் அதிகரித்து வெற்றி வாய்ப்பு கூடும்.
பாஜகவும் இதை செய்ய வேண்டும்
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் மனதில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. பாஜகவை பொறுத்தவரை கீழடி உள்ளிட்ட விஷயங்களில் கொஞ்சம் இறங்கி வர வேண்டும். இதேபோல் தமிழக மக்களின் வாக்குகளை பறிக்கும் வகையில் அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் ஏதாவது திட்டங்கள் அல்லது வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும். மேற்கண்ட எல்லாம் சாத்தியமானால் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக்கனியை பறிக்கும்.