தமிழகத்தை கண்டுகொள்ளாத பாஜக... ஒன்றும் செய்யாத திமுக.. - வாக்காளர்களிடம் இறுதியாக கோரிக்கை வைத்த எடப்பாடி

By Ajmal KhanFirst Published Apr 17, 2024, 10:59 AM IST
Highlights

மத்திய அரசு சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை வழங்காதது மட்டுமின்றி, மத்தியக் குழுவை காலங்கடந்து அனுப்புவதாக விமர்சித்துள்ளார். 

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு இறுதியாக கோரிக்கை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் உள்ளிட்ட, 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, கவர்ச்சியாகப் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக இன்றுவரையிலும், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்தர்பல்டி அடித்து, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டும்; விளம்பரங்களின் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது.

Vindhya : உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாத ஸ்டாலின்.. டெல்லிக்கு போய் டைனோசர் பிடிப்பாராம்- விந்தியா கிண்டல்

மின் கட்டண உயர்வு

விடியா ஆட்சியில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அரிசி உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வரி உயர்வு, குப்பைக்கு வரி, அரசின் அனைத்து கட்டணங்களையும் பலமடங்கு உயர்த்தி உயர்த்தியது விடியா திமுக அரசு. கட்டுமானப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்ததால், ஏழை எளிய நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற குறிக்கோள், கனவாகவே மாறியது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. புதிதாக வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழகத்தில் பரவியுள்ளது. ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் உள்ளிட்ட அனைத்தையும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கண்டும் காணாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

போதைப்பொருட்கள் கடத்தல்

விடியா திமுக ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. இளைஞர்களையும், மாணவர்களையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளனர் திமுக நிர்வாகிகள். முதலமைச்சரின் மகனும், மருமகனும், சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஒரே ஆண்டில் முறைகேடாக சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை வழங்காதது மட்டுமின்றி, மத்தியக் குழுவை காலங்கடந்து அனுப்புதல். தமிழகத்திற்கு சேர வேண்டிய இந்த நிதியை பெற வக்கில்லாத அரசாக விடியா திமுக அரசு உள்ளது. 2014-ல் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமையும்போது, பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ. 71/-. டீசல் 1 லிட்டர் விலை ரூ. 55/-. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 105 டாலர்.

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வு.. வாக்கு வேட்டையாடும் வேட்பாளர்கள்- கிடுக்கிப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு

2024-ஆம் ஆண்டு பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 102/-. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ. 94/-. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 86 டாலர். 2014-ல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை அதிகமாக இருக்கும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவாக இருந்தது. இதுவே 2024, பா.ஜ.க-வின் ஆட்சியில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பேரல் விலை குறைவாக இருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அரசு அதிகளவில் மேல்வரி விதித்ததுதான். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை

தமிழகத்தில் விடியா திமுக அரசு 2021-ல் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தது. விற்பனை வரியைக் குறைத்து விலையைக் குறைத்திருக்காலாம். ஆனால், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2024 தேர்தல் அறிக்கையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், தமிழக மக்கள் இதனை நம்பத் தயாராக இல்லை என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!