Jothimani: நாட்டில் தொகுதி பக்கமே போகாத ஒரே ஜோதிமணி தான் - விஜயபாஸ்கர் விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 17, 2024, 10:50 AM IST

நாட்டில் தொகுதி பக்கமே வராத ஒரே உறுப்பினர் ஜோதிமணி தான் என  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.


கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற வாகன பேரணியை தொடர்ந்து செக் போஸ்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பேசினார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், விராலிமலை மண் நமது மண், இங்கு துளிர்க்க போவது இரட்டை இலை மட்டும் தான்.

ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த தங்கவேலு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கும் ஆட்சியால் தாலிக்கு தங்கம் திட்டம் போச்சு, திருமண உதவித் தொகை பணம் போச்சு, லேப்டாப் போச்சு, ஸ்கூட்டர் போச்சு, ஆடு, மாடு போச்சு, காவிரி தண்ணியும் போச்சு ஜோதி மணியும் போயிருச்சு.

Tap to resize

Latest Videos

மோடிக்கு எதிராக ராகுலும், ஸ்டாலினும் வியூகம் வகுத்து களமாடி வருகின்றனர் - பிரசாரத்தில் திருமா பேச்சு

அதிமுக ஆட்சியில் விராலிமலை தொகுதிக்கு எனது உழைப்பால் எல்லா திட்டங்களும் கிடைத்தன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஜோதிமணி இந்த தொகுதி பக்கமே வரவில்லை. இந்தியாவிலேயே ஒரு தொகுதி பக்கம் வராத எம்பி என்று நல்ல பேரை வாங்கியவர் ஜோதிமணி. ஜோதிமணி இனி வந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்டால் டாட்டா சொல்ல வேண்டும்.

ஓட்டு கேட்பவர்கள் மக்கள் முன்னால் ஓட்டு கேட்க வேண்டும். ஆனால் ஜோதிமணி ஐந்து ஆண்டு காலமாக இந்த தொகுதியை திரும்பி கூட பார்க்கவில்லை. ஆள் இல்லாத இடத்தில் ஓட்டு கேட்டு விட்டு பிடி உஷாவை  போல் திரும்பி சென்று விடுகிறார். 100 நாள் வேலை திட்டத்தின் அமைச்சராக இருந்த போது காலை 8 மணிக்கு வந்து 2 மணிக்கு போனால் போதும். ஆனால் இப்போ 7 மணிக்கு வந்து 4 மணிக்கு போகனும், ஆனால் ஜோதிமணி கடந்த தேர்தலின் போது வந்து சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - கோவையில் அண்ணாமலை பேச்சு

நான் மெழுகாய் உருகி என் வாழ்க்கை முழுவதும் விராலிமலை தொகுதி மக்களுக்காக உழைப்பேன். திமுக ஆளும் கட்சி ஸ்டாலின் முதலமைச்சர். ஆனால் நீட் என்றாலும், கொரோனா என்றாலும் சட்டபேரவையின் என் குரல் ஓங்கி ஒலிக்கும். விராலிமலை மக்களுக்கு ஒன்று என்றால் எனக்கு துடிக்கும், ஒரு காலத்தில் விராலிமலை தொகுதி என்றால் எல்லோரும் புருவத்தை சுருக்கி பார்த்தார்கள் அப்படிப்பட்ட சூழலில் நான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின் தற்போது விராலிமலை என்றால் புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்துள்ளேன்,

நான் வாக்குக்காக மட்டும் நம்பி வாக்குறுதிகளை கொடுப்பவன் அல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக விராலிமலை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களுக்கு திமுகவின் பெயர் வைத்து கொண்டு உள்ளனர். மீண்டும் ஆட்சிக்கு வந்து அந்த பெயர்களை எல்லாம் மாற்றிவிடலாம்,

திமுகவினர் சொன்னதை எதையுமே செய்யவில்லை. தாலிக்கு தங்கமும் இல்லை, தாலிப்பதற்கு தக்காளியும் இல்லை. இதுதான் இன்றைய நிலை. இது இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மாறும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இதன் பின்னர் பேசிய வேட்பாளர் தங்கவேலு கூறுகையில், காவிரி பிரச்சனைக்கு தமிழக அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தீர்வு காணவில்லை. தான் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசி காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று பேசிய அவர், அதை எவ்வாறு நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்பதை இந்தியிலும் பேசி காட்டியதால் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

click me!