கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி.ஜோதிமணியிடம் அப்பகுதி மக்கள் குறைகளை பட்டியலிட்டு முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு கட்ட எதிர்ப்புகளையும் கடந்து கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற ஜோதிமணி வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், கரூர் மாவட்டம், பரமத்தி ஒன்றியம், நடந்தை ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டையார் பாளையம் கிராமத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
undefined
குழந்தைக்கு பெயர் சூட்டி அள்ளி கொஞ்சிய சௌமியா அன்புமணி; தொண்டர்களின் செயலால் வேட்பாளர் நெகிழ்ச்சி
அப்போது வேட்பாளர் ஜோதிமணியிடம், அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 5 வருசத்துக்கு முன்னாடி உங்களை நம்பிதான் ஓட்டுபோட்டோம்! இந்த ஊர்பக்கம் வந்தீங்களா? இந்த ஊருக்கு எதாவது செஞ்சீங்களா? என சரமரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத அந்த நபர், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டு போட்ட எங்களுக்கு கேள்வி எழுப்ப உரிமை இல்லையா என்றும், கேள்வி எழுப்பினாலே அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என பேசுவதாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.