சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முந்தைய ஆட்சியில் நடந்த குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லாத நேரத்தின் போது, சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தரப்பில் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், குறுக்கிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,எதிர்கட்சி தலைவருக்கு பேச அனுமதி அளியுங்கள் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை, சிவகங்கையில் ஒருவர் வெட்டிக் கொலை, சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என முதல்வர் சொன்ன அதே வேளையில் 4 கொலைகள் நடந்துள்ளன என விமர்சித்தார். அன்றாட நிகழ்வாக தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 4 கொலைகள் நடந்துள்ளன. இது மக்களின் உயிர் பிரச்னை, மக்கள் வெளியில் நடமாடாத முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கொலைகள்
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச தொடங்கும் போது, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், தூத்துக்குடி, சாத்தான் குளம் சம்பத்தை மறந்து விடக் கூடாது. முதல்வர் - தைரியமிருந்தால் நான் பேசும் பதிலை கேட்டு விட்டு செல்ல வேண்டும். இப்படி ஓடுகிறீர்களே என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், நேற்று நான்கு கொலைகள் நடைபெற்றிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சிவகங்கை குடும்பத்தகராறு என தெரிய வந்துள்ளது. ஈரோட்டில் தம்பதியினரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியதில் கணவர் உயிரிழந்துவிட்டார். மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய முயற்சி செய்த போது காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது ஈரோடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என தெரியவந்துள்ளதாக கூறினார்.
சென்னையில் இரட்டை கொலை: கொலையாளிகளை சேலத்தில் சுற்றி வளைத்த போலீஸ்
இபிஎஸ்க்கு ஸ்டாலின் பதிலடி
காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது. குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொலை குற்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளி வரும் போது அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறுவது போன்று காட்டப்படுகிறது என கூறினார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், கூலிப்படையினர் கண்காணிக்கப்பட்டு தேவையான இடங்களில் குண்டர் சட்டங்களில் கைது செய்யப்படுகின்றனர். தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 2023 ஆம் ஆண்டில் 49,280 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள் 2024ல் 31,438 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது
எண்ணிக்கையின் அடிப்படையில் குற்றங்கள் முந்தையை ஆண்டோடு ஒப்பிடும் போது குறைந்துள்ளதாக கூறினார். பழிக்குப் பழிவாங்குவோரின் கொலைகளும் குறைந்துள்ளது. அரசின் மீது பழிசுமத்தி அரசியல் ஆதாயம் பார்க்க நினைப்போர் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார்.