
சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான 50 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை 68 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 177 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன.
இதையடுத்து சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம்,புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.
இதைத்தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 10 மணிநேர விசாரணைக்கு பின்னர் சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 177 கிலோ தங்கத்தில் 30 கிலோ தங்கத்தை கடந்த மே 29 ஆம் தேதி அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில் இன்று சேகர் ரெட்டிக்கு சொந்தமான மேலும் 50 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை சேகர் ரெட்டியின் 68 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.