விவசாயிகளை விட திமுகவுக்கு கூட்டணிதான் முக்கியம்: அண்ணாமலை!

Published : Oct 05, 2023, 07:34 PM IST
விவசாயிகளை விட திமுகவுக்கு கூட்டணிதான் முக்கியம்: அண்ணாமலை!

சுருக்கம்

திமுகவுக்கு விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம் என பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை விமர்சித்துள்ளார்

மணல் கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தவிர விவசாயத்தைக் குறித்தும், டெல்டா பகுதிகள் குறித்தும் திமுகவுக்கு எப்போதும் கவலை இருந்ததில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுகவுக்கு தமிழக விவசாயிகளை விட தேர்தல் கூட்டணி தான் முக்கியம். கடந்த 1970 ஆம் ஆண்டுகளில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் ஏற்பட்ட காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை, 2018 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, இரண்டு மாநிலங்களுக்கிடையே, எந்தப் பிரச்சினையும் எழாமல், தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம், தமிழகத்துக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடக் கூறியும், கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடக மாநிலம் கட்டியுள்ள அணைகள் அனைத்திலும், மொத்தக் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கையில், மேட்டூர் அணையில், வெறும் 30 சதவீதம் கொள்ளளவே தண்ணீர் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் நிச்சயம் பாதிக்கப்படும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், திமுக அரசோ, இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், தங்கள் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தவோ, கண்டனம் தெரிவிக்கவோ தைரியமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,000 இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேட்டூர் அணையைத் தூர்வாரினால், சுமார் 30 டிஎம்சி கொள்ளளவு அதிகமாக அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றும், அதற்கு 3000 கோடி நிதி தேவைப்படும் என்றும், தமிழக அரசின் நீர்வளத்துறை பரிந்துரை செய்த திட்டத்தை, நிதி இல்லை என்று நிராகரித்திருக்கிறது திமுக அரசு. மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு திட்டமாக மேட்டூர் அணையைத் தூர்வாரும் திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்திருந்தால், விவசாயிகள் பலனடைந்திருப்பார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பு அணைகள் கட்டுவோம் என்று முதல் நிதிநிலை அறிக்கையில் கூறினார்கள். இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது. எத்தனை தடுப்பு அணைகள் கட்டியுள்ளார்கள்? கடந்த ஆண்டு மட்டுமே, காவிரியில் வந்த தண்ணீரில் 60% தண்ணீர் யாருக்கும் பலனில்லாமல், கடலில் வீணாகச் சென்று கலந்தது. தடுப்பு அணைகள் கட்டியிருந்தால், அந்த தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தியிருக்க முடியும். காவிரி நதி, தண்ணீர் இல்லாமல் வறண்டு போனால், மணல் கொள்ளை அடிக்கலாம் என்பதைத் தவிர விவசாயத்தைக் குறித்தும், டெல்டா பகுதிகள் குறித்தும் திமுகவுக்கு எப்போதும் கவலை இருந்ததில்லை.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக, ஏக்கருக்கு 30,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, தற்போது, ஒரு ஹெக்டேருக்கே 13,500 ரூபாய் மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த நிதியை, பாதிக்கப்படும் விவசாயிகள் அனைவருக்கும் ஒழுங்காக வழங்குவார்களா என்பதும் கேள்விக்குறி.

விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், எந்த தொலைநோக்குத் திட்டங்களையும் தீட்டாமல், வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை திமுக உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸை வலியுறுத்தி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரைப் பெற வேண்டிய கடமையை உணர வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி