குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
காவிரி ஆற்றில், கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் பெறப்படாததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, முதல்வர் ஸ்டாலினால் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.
டெட் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சினை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அக்டோபரில் திறக்க வேண்டிய 20.22 டிஎம்சி நீர் தவிர, 50 டிஎம்சி நீர் திறக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
இதனிடையே, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்துக்கு வர வேண்டிய நீரின் அளவு அதிகமாக இருக்கும் நிலையில், குறைவாகவே கர்நாடக அரசு திறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.