தலைமைச் செயலக வாயிலில் முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு..! தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

By Ajmal KhanFirst Published Jun 1, 2022, 1:38 PM IST
Highlights

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராதவர் மீது  காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பலன் கிடைக்காத காரணத்தால் முதியவர் சென்னை தலைமைசெயலகத்தில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைசெயலக வளாகத்தில் தீக்குளிப்பு

சென்னை தலைமைசெயலகத்திற்கு முதலமைச்சர் தனிப்பிரிவு, அமைச்சர்கள் அலுவலகம், அரசு துறை செயலாளர்கள் அலுவலகம் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை தலைமைசெயலகம் வளாகம் பரபரப்பாக இருந்த நிலையில், தலைமைசெயலகத்திற்குள் உள்ளே வரும் பகுதியில் திடீரென முதியவர் ஒருவர் தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் முதியவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பணம் வாங்கி ஏமாற்றியதால் விரக்தி

 முதியவர் தீக்குளித்த சம்பவம் தலைமசெயலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கொண்டு வந்த கோரிக்கை மனுவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த மனுவில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் அவரது நண்பரான சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு வட்டி இல்லா கடனாக சுமார் 14 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் பணத்தை பெற்ற சுப்பிரமணி பத்தாண்டுகளாக அதனை திருப்பி தராததால் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளிப்பில் ஈடுபட்டதாக தெரியவந்தது. சென்னை தலைமைசெயலகத்தில் உள்ளே முதலமைச்சர் அரசு அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் முதியவரின் தீக்குளிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!