
பல்வேறு துறைகளில் ஊழல்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி விசாரணையை மேற்கொண்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றார் முதல்வர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை கேட்டு பெற்றிருக்க முடியும். பிரதமர் தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை. மக்கள் நலனில் அக்கறையுடன் கலந்து கொண்டதாக கூறினால் 3 ஆண்டுகளாக புறக்கணித்தது ஏன்?
ஆளுங்கட்சியான பின் மோடிக்கு வெள்ளை குடை
எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்கவிட்டார். ஆளுங்கட்சியான பின் மோடிக்கு வெள்ளை குடை பிடிக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைபாடு. ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்பது இதில் தெரிகிறது. ஒரு முதலமைச்சர் கடந்த 3 ஆண்டுகாலம் நடத்தி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனையை பேசாமல் தன்னுடைய கடமையை செய்யத் தவறிவிட்டார்.
மோசமான ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி
திமுக நிர்வாகி மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்துக்கு சென்று ஜாமீன் பெற்றுவிட்டார். மோசமான ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக அரசில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.
தம்பி எதற்காக வெளிநாட்டிற்கு ஓடினார்?
உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போல் EDக்கும் பயமில்லை, மோடிக்கும் பயமில்லை என்றால், அந்த தம்பி எதற்காக வெளிநாட்டிற்கு ஓடினார்? தமிழ்நாட்டில் இருந்திருந்தால், பயமில்லை என்று சொல்லிக் கொள்ளலாம். இதுதான் ஆரம்பம்.. விரைவில் யார் எப்படி பயப்படுவார்கள் என்பது தெரியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.