
Tamilnadu Chief Kazi Death : தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் (வயது 84 ) பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகையின் போதும் பிறையை பார்த்து ரம்ஜான், பக்ரீத், மிலாது நபி போன்ற விஷேச நாட்களை அறிவிப்பார். அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ, எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.சென்னை நியூ காலேஜில் அரபுப் பேராசிரியராக இருந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி திரு.சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர். தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலந்தொட்டு, என் மீது பேரன்பு செலுத்தியவர் அவர்.
மூப்பெய்திய போதும், நான் பங்கெடுக்கும் இப்தார் நிகழ்வுகள் அனைத்திலும் தன்னுடைய உடல்நலன் ஒத்துழைக்கும் வரையில் பங்கேற்பேன் என்று சொல்லிய அவரை இன்று இழந்து வாடுகிறோம். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.