அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, மதுரையில் உள்ள அமலாக்க இயக்குனரகத்தின் துணை மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சோதனை நடத்தினர்.
என்ன நடந்தது?
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சுரேஷ் பாபு என்ற மருத்துவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி, இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.30 கோடி லஞ்சம் கொடுக்குமாறு பேரம் பேசி உள்ளார். ஆனால் இதற்கு சுரேஷ் பாபு மறுத்த நிலையில் ரூ.51 லட்சம் லஞ்சம் தந்தால் வழக்கை கைவிடுகிறேன் என்று அங்கித் திவாரி கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து முதல்கட்டமாக 01.11.2023 அன்று ரூ.20 லட்சம் பணத்தை சுரேஷ் பாபு அங்கித் திவாரியிடம் வழங்கி உள்ளார். இதை தொடர்ந்து மீதமுள்ள பணத்தை கொடுக்க வேண்டும் என்று வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி அழைப்பு மூலம் அங்கித் திவாரி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். மீதமுள்ள ரூ.31 லட்சம் பணத்தை தரவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டி உள்ளார். இதனால் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று சுரேஷ் பாபு, ரூ.20 லட்சம் பணத்தை அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய அங்கித் திவாரி மதுரை புறப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி கைது செய்தனர். அவரின் கார் மற்றும் 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரியின் வீடு அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதனிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யார் இந்த அங்கித் திவாரி?
அங்கித் திவாரி 2016-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார், இதற்கு முன்பு குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் பணியாற்றியுள்ளார். மதுரையில் உள்ள மத்திய அரசின் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமலாக்க அதிகாரியாக திவாரி பணியாற்றி வருகிறார். மத்திய பிரதேசத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறையின் FIR வெளியானது!
இந்த சூழலில் தான் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கிய அவர் சிக்கி உள்ளார். அமலாக்கத்துறை பெயரில் வேறு எந்த அதிகாரிகளையும் மிரட்டி பணம் பெற்றுள்ளாரா என்பது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மதுரையில் உள்ள மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தியவர் என்பதால், மணல் குவாரி அதிபர்களிடமும் பணம் கேட்டு மிரட்டினாரா என்பது குறித்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை
பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டவும், துன்புறத்தவும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை பயன்படுத்துவதாக தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.