திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை.! காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Jan 3, 2025, 10:17 AM IST

தமிழக அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் என்ன.?


அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் அமைச்சர்களாக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் வீட்டை ஏற்கனவே பல முறை அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்த அமலாக்கத்துறை இன்று மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. அதன் படி தமிழக அரசின் மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

சோதனைக்கு காரணம் என்ன.?

இன்று காலை காட்பாடியில் உள்ள திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக 10 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சிக்கியது. இதனால் மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது.  இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த பணம் விவகாரம் தொடர்பாக  பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேலூரில் உள்ள காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார். மேலும் காட்பாடியில் உள்ள திமுக நிர்வாகி சீனிவாசன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை

காட்பாடி திமுக பிரமுகர் மற்றும் ஊரக விளையாட்டு மேம்பாட்டு துறையில் வேலூர் மாவட்ட கபடி அமைப்பாளராக இருப்பவர்  பூஞ்சோலை சீனிவாசன்,  இன்று காலை காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூர் பகுதியில் அவரது வீட்டில் மத்திய அமலாக்க துறையினர்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் பூஞ்சாலை சீனிவாசனுக்கு சொந்தமான வேறு ஒரு வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சோதனைக்கு ”யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வேலூர் வீட்டில் தற்போது யாரும் இல்லை.  தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன். சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும்”  என கூறினார். 

click me!