
திருநெல்வேலி
ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்க பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் குமரேசன் (கன்னியாகுமரி), மணவாளன் (தூத்துக்குடி), ஆதம்இலியாஸ் (நெல்லை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் செண்பகம் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
இந்தப் போராட்டத்தில், "நிதி நெருக்கடியை காரணம் காட்டி நிறுத்திவைத்துள்ள 7-வது ஊதிய குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தி நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அனைத்து ஓய்வூதிய பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும்.
வாரிய தொழிலாளர்களுக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும்,
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி சட்ட சலுகைகள் வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சங்க மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவபெருமாள் (தூத்துக்குடி), குமரன் நாயர் (கன்னியாகுமரி), சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் வண்ணமுத்து, துணை தலைவர் சுடலைராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.