
திருச்சி
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கீழ் அமைந்துள்ள காவிரி ஆற்றில் அமர்ந்து மகளிர் அமைப்பினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனொரு பகுதியாக திருவெறும்பூரை அடுத்துள்ள காவிரி கரை கிராமமான சர்க்கார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கீழ் அமைந்துள்ள காவிரி ஆற்றில் அமர்ந்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்த இந்தப் போராட்டத்திற்கு மகளிர் அமைப்பின் தலைவி லில்லியன் மேரி தலைமை வகித்தார். இதில் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளும் பங்கேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் கலைந்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நடந்த இடம் கோட்டை காவல் சரகத்திற்கும், திருவெறும்பூர் காவல் சரகத்திற்கும் இடைப்பட்ட இடம் என்பதால் இரு தரப்பு காவலாளர்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.