
தேனி
குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்-க்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில், மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதை அறிந்து தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து முதலில் தீ விபத்து மரணம் என்று குரங்கணி காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். பின்னர், அனுமதி அளிக்காத பகுதியில் மலையேறும் பயிற்சிக்கு அழைத்து சென்றது, முறையான பயிற்சி கொடுக்காமல் அழைத்து சென்று உயிர் இழப்புகள் ஏற்பட காரணமாக இருந்தது போன்ற காரணங்களை சுட்டிக் காட்டி இந்த வழக்கில் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, இந்த காட்டுத்தீ உயிரிழப்பு தொடர்பாக சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் ஜியாட், ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியை சேர்ந்த சுற்றுலா அலுவலக உரிமையாளர் பிரபு, சென்னை குழுவுடன் வந்த வழிகாட்டி அருண்பிரபாகர் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதியப்பட்டது. இதில் அருண்பிரபாகர் காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில், பிரபுவை ஈரோட்டில் வைத்து தனிப்படை காவலாளர்கள் கைது செய்தனர். சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான் ஜியாட்டை காவலாளர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அவரை பிடிக்க சென்னை, புதுச்சேரி, பெங்களுரூ போன்ற பகுதிகளுக்கு தனிப்படை காவலாளர்கள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பீட்டர் வான் ஜியாட் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்தியபிறகு, தேனி மாவட்டம், போடி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பீட்டர் வான் ஜியாட் நேற்று காலை போடி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டு மணிவாசகன் முன்னிலையில் சரணடைந்தார். பின்னர், அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அத்துடன், நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் சமர்ப்பித்தார்.
அதன்பேரில், இந்த வழக்கில் பீட்டர் வான் ஜியாட்டுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.