தடம் புரண்ட பல்லவன் விரைவு இரயில்; ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் உயிர் தப்பினர்...

 
Published : Apr 26, 2018, 08:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
தடம் புரண்ட பல்லவன் விரைவு இரயில்; ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு; பயணிகள் உயிர் தப்பினர்...

சுருக்கம்

Pallavan Express train trapped great crash Avoided by driver skill Passengers survived ...

திருச்சி
 
திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்தின் அருகே பல்லவன் விரைவு இரயிலில் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டது. ஓட்டுநர் இரயிலை சாமர்த்தியமாக இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சி மாவட்டம், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பல்லவன் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் நாள்தோறும் அதிகாலை 4.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் வரும். 

பின்னர் அந்த இரயில் திருச்சியில் இருந்து காலை 6.40 மணி அளவில் புறப்பட்டு பகல் 11.50 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும். நேற்று அதிகாலை வழக்கம்போல இந்த இரயில் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. 

திருச்சி கிராப்பட்டியை அடுத்து சந்திப்பு மேம்பாலம் அருகே காலை 6.25 மணிக்கு வந்தபோது, திடீரென இரயில் என்ஜின் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே என்ஜின் ஓட்டுநர் முருகன், உதவியாளர் சிவா ஆகியோர் பிரேக் போட்டு இரயிலை நிறுத்தினர். அதன்பிறகு அவர்கள் கீழே இறங்கிப் பார்த்தனர். அப்போது என்ஜின் தடம் புரண்டு இருந்தது. என்ஜினின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி நின்றன. தண்டவாளத்தின் இடதுபுறம் விரிசல் ஏற்பட்டு துண்டாகி இருந்தது. 

இதன் காரணமாகதான் என்ஜின் தடம் புரண்டது தெரியவந்தது. பல்லவன் விரைவு திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்தை நெருங்கிவிட்டதால் இரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக இரயில் மெதுவாக இயக்கப்பட்டது. அந்த சமயத்தில் என்ஜின் தடம் புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் நல்ல வேளையாக உயிர் தப்பினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கோட்ட துணை பொதுமேலாளர் ஹரிஷ் மற்றும் இரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், இரயில்வே பாதுகாப்புபடை அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். 

தடம் புரண்ட இரயில் சக்கரங்களை அதிநவீன ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதால் இரயில் புறப்பட தாமதமானது. அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்தனர். 

ஒரு சில பயணிகள் இரயிலில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று பேருந்துகளில் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனையடுத்து தடம் புரண்ட இரயில் என்ஜினை நீண்ட நேரம் போராடி மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.

பின்னர், அந்த என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு இரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து இரயிலை மெதுவாக இயக்கி கொண்டு திருச்சி சந்திப்பு இரயில் நிலையத்துக்குள் வந்து நிறுத்தினர். 

அங்கு பயணிகளை ஏற்றி கொண்டு காலை 9.50 மணிக்கு பல்லவன் விரைவு சென்னை புறப்பட்டு சென்றது. இந்த விபத்தால் பல்லவன் விரைவு இரயில் மூன்று மணிநேரம் தாமதமாக புறப்பட்டது.  

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!