
சென்னையில் பெய்த மிதமான மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், திண்டாடும் திராவிட மாடல் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை. சாதாரண மழைக்கு கூட சென்னை தாங்குவதாகத் தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட, ‘துணை முதலமைச்சர் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையை கண்காணித்தார்’ என்று விளம்பரப் புகைப்படங்கள் வருகின்றன.
சாலையைச் சரி செய்துவிட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே?" என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
"சென்னை மட்டுமல்ல, டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே, இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது ஒரு திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு," என்றும் தனது அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.