
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்பட ஏராளமான கோயில்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோயில்களின் கும்பாபிஷேம் உள்ளிட்ட திருவிழாக்களை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. கோயில்களின் கட்டுமானம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளையும் அறநிலையத்துறை மேற்கொள்கிறது.
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற கோயில்களில் அதிக அளவு வருமானம் வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அந்த நிதியை கோயில்களின் பரமாமரிப்பு உள்பட பக்தர்களின் வசதிக்கு பயன்படுத்தாமல் வணிக வளாகங்கள் கட்டுவது உள்ளிட்ட மற்ற வணிக பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருவதாக பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.
இந்த நிலையில், கந்தக்கோட்டம் கோயில் நிலத்தில் கோயில் நிதியை கொண்டு வணிக வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் கோயில் நிலத்தில் வணிக வளாங்கள் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவு
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'கோயில் நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி கட்டுமானங்களை பக்தர்கள் வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கந்தகோட்டம் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.