
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஒயாமல் மழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
மறுபக்கம் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான குவிண்டால் நெல்லை குவித்து வைத்துக் கொண்டு கொள்முதலுக்காக விவசாயிகள் காத்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையில் நெல் நனைந்து வீணாகிவிட்டன. வயல்களில் புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லும் ஈரப்பதம் நிறைந்ததாகவே உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்த நெல்களின் ஈரப்பதம் 23 முதல் 25% வரை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டும் தான் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசால் கொள்முதல் செய்ய முடியும். எனவே, 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் பேசி அனுமதி வாங்கும்படி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மத்திய அரசு குழு அமைப்பு
இதேபோல் நெல் ஈரப்பத வரம்பை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக தளர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்ததது. இந்நிலையில், தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரிக்க மத்தியக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
நெல் ஈரப்பத வரம்பு 22% ஆக அதிகரிக்கப்படுமா?
அதாவது மத்திய உணவுக்குழு இயக்குநர் தலைமையில் 9 பேர் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்படுள்ளது. இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து 3 குழுக்களாக ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஈரப்பதம் மிக்க நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்வார்கள். இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் நெல் ஈரப்பத வரம்பு 17% ல் இருந்து 22% ஆக அதிகரிக்கபடும் என தெரிகிறது.