முதலமைச்சர் கடும் எச்சரிக்கை ! போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட டாக்டர்கள் !!

By Selvanayagam PFirst Published Nov 1, 2019, 8:17 AM IST
Highlights

இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால்  டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்புகின்றனர்.
 

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் முதலில் 5 டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 3 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சங்கத்தினரை அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அரசு ‘அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது.

இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ‘போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய டாக்டர்கள் நியமிப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.ஆனால் இதை பொருட் படுத்தாமல் நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் இருந்து விலகி மீண்டும் பணிக்கு திரும்பினாலும், கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளின் நலன் கருதி டாக்டர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து டாக்டர்கள் இன்று தங்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொண்டு இன்று பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.

click me!