
கன்னியாகுமரி
நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், அடைக்காகுழி அரசு நடுநிலைப் பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடைப்பெற்றது. அந்த முகாமுக்கு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார்.
இதில் ஆட்சியர், 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, ஒரு பயனாளிக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணை, வேளாண்மைத்துறை மூலம் 5 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
அதன்பின்னர் அவர் பேசியது: "மக்கள் அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் குறித்து தெரிந்துகொண்டு, அதற்காக விண்ணப்பித்து உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.
இம்மாவட்டத்தில் வாழைக் கன்றுகள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள், சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தை பயன்படுத்தி, வாழையோடு காய்கனிகளையும் பயிரிட்டு அதிக லாபத்தை ஈட்டலாம்.
நிபா வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. 141 தனியார் மருத்துவமனைகளிலும், 11 அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் காரணமாக வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார்.