
கன்னியாகுமரி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரைக் கொன்ற காவலாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை காவலாளர்கள் கொன்றனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்கு காரணமான காவலாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்,
ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு முடிவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன்படி, நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, நீதிமன்றம் முன்புறம் உள்ள சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் தலைமை தாங்கி பேசினார். சங்க செயலாளர் பிரதாப், முன்னாள் தலைவர்கள் மகேஷ், அசோக்பத்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் உதயகுமார், பாலஜனாதிபதி, மரிய ஸ்டீபன், ராஜகுஞ்சரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்புறம் உள்ள சாலையை மறித்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகே சாலையில் போக்குவரத்து சீரானது.