
போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, என்னை காப்பாற்ற ஓடி வந்தார், தனக்கு வைத்த குறி தன் தோழியின் உயிரை பறித்து விட்டதாக காயமடைந்த பெண் கண்ணீருடன் கூறியுள்ளார்.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு என்பது தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளை எல்லாம்விட வேறுபட்டது. அதாவது மக்கள் போராட்டங்களைக் கலைக்க நடத்தப்படும் துப்பாக்கிச் சூடாக இல்லாமல், செலக்ட் செய்து எலிமினேட் செய்யும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் சுட்டு வீழ்த்துவது ராணுவ உத்தியாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு அமைந்திருக்கிறது.
இதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயங்களுன் கவலைக்கிடமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா மற்றும் ஸ்னோலின் என்பவரும் பலியாகியுள்ளார்.
ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார்.
இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலினின் தோழி இன்பென்டா என்பவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு இருக்கிறார். தனது தோழியின் மரணம் குறித்து இன்பென்டா கண்ணீருடன் கூறியுள்ளார்.
அதில், நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு செல்லும் முன்பே அங்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதை தீ வைத்தது யார் என்று தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடந்தபோது எங்களை தாக்க வந்த போலீசார் கைகளில் லத்தி மட்டும்தான் இருந்தது.
அப்போது துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் மேலேயிருந்து வந்தன. நானும் பலியான ஸ்னோலினும் ஒன்றாக போராட்டங்களில் பங்கேற்றோம். எனக்கு வைத்த குறி என் தோழியை பலிவாங்கிவிட்டது. அவள் குண்டடி பட்ட நிலையிலும் என்னை காப்பாற்ற ஓடி வந்தாள்.
கலெக்டரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி எங்களது பிரச்னைகள் எப்படியாவது தீர்ந்துவிடும் என்றுதான் நினைத்தோம். ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் எல்லோருக்கும் பிரியாணி கொடுக்கலாம் என நாங்கள் எவ்வளவோ ஆசையில் இருந்தோம். ஆனால், எல்லாவற்றையும் ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் முடித்துவிட்டார்கள்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் போலீசாரின் கெடுபிடிகள் தொடர்கின்றன. எங்களுக்கு சரியான சாப்பாடு கிடைக்கவில்லை. தண்ணீர் தரவில்லை. எங்களுக்கு நிவாரணம் கூட தேவையில்லை. இத்தனை உயிரை காவு வாங்கிய இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.