தென் மாவட்ட இளைஞர்களின் வாக்குகளுக்கு குறி வைத்த திமுக.. காமராஜர் பிறந்த மண்ணில் 'மெகா' மாநாடு!

Published : Jan 19, 2026, 07:21 PM IST
dmk

சுருக்கம்

தென் மாவட்ட இளைஞர்களின் வாக்குகளை குறி வைக்கும் வகையில், திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு பிப்‍ரவரி 7ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் கடந்த டிசம்பர் மாதம் வடக்கு மண்டல திமுக இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெக தலைவர் விஜய் இளைஞர்களுக்கு குறிவைத்த நிலையில், வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளையும் கவர வேண்டிய கட்டாயத்தில் திமுகவும் உள்ளது.

இளைஞர்களின் வாக்குகளுக்கு திமுக குறி

இதனால் தான் இளைஞர்கள் மத்தியில் திமுகவின் திட்டங்கள், தமிழகத்துக்கு எதிராக பாஜகவின் நிலைப்பாடு ஆகியவற்றை எடுத்து சொல்லி அவர்களை கவர வேண்டும் என திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டில் உதயநிதி தெரிவித்தார். இந்த நிலையில், தென் மாவட்ட இளைஞர்களின் வாக்குகளை குறி வைத்து திமுகவின் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு பிப்‍ரவரி 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், 'கடந்த 14.12.2025 அன்று திருவண்ணாமலை, கலைஞர் திடலில், 28 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் முதல் பாகம் வரை, வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் என ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து, “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

தென் மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட, கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 07.02.2026 சனிக்கிழமை, மாலை 4.00 மணி அளவில், விருதுநகர், ‘கலைஞர் திடலில்' தென் மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு" நடைபெற உள்ளது

யார் யார் பங்கேற்கிறார்கள்?

கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., மு.பெ.சாமிநாதன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

வரலாறு படைக்க வேண்டும்

இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட, அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்' என்று கூறப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழக அரசு பேருந்தில் இந்தி பெயர் பலகை.. பொங்கியெழுந்த தமிழ் ஆர்வலர்கள்.. முழு விவரம்!
விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்