தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளும் என்ற கனவை நிறைவேற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம் பேராவூரில், திமுக தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற வைப்பது வாக்குச்சாவடி முகவர்கள்தான். 19 மாவட்டங்களில் இருந்து 14,978 வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. திமுகவின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் வரும் தேர்தலில் வெற்றி வீரர்கள்.” என்றார்.
தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆள வேண்டும் என குறிப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டை திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என தலைவர் கலைஞர் கனவு கண்டார். அந்த கனவை நிச்சயம் நிறைவேற்றியே காட்டுவோம் என்றார்.
“திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவ வேண்டும். இந்தியாவில் பல பிரதமர்கள், குடியரசு தலைவர்களை உருவாக்கியது திமுக அரசு. மீண்டும் ஒரு வரலாற்று கடமையாற்ற காலம் நம்மை அழைக்கிறது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்துவதால் திமுகவை யாரும் நிராகரிக்க மாட்டார்கள் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக சீரழித்து விட்டது. தமிழ்நாட்டுக்கு எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. ராமேஸ்வரத்தை சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்றுவோம் என்றார். இன்றைக்கு அது அப்படி மாறி விட்டதா? மீனவர்கள் கைது தினமும் நடக்கிறது. இதற்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என மோடி சொன்னார். பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படவில்லையா?” என கேள்வி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
: இராமநாதபுரத்தில் தென்மண்டல BLA-2 பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் தலைமையுரைhttps://t.co/3AL9pN0KBx
— M.K.Stalin (@mkstalin)
வாக்குறுதிகள் என்ற பெயரில் இதுபோன்று தமிழ்நாட்டில் பல வடைகள் சுடப்பட்டுள்ளன. மோடி சுட்ட அந்த வடைகளெல்லாம் ஊசிப் போய் விட்டன எனவும் ஸ்டாலின் சாடினார்.
அதிமுகவுக்கு என சொந்தமாக எந்த சாதனையும் கிடையாது என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ராமநாதசாமி கோயில் தேரை ஓட வைத்தது திமுகதான். ராமநாதபுரத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக எதிர்ப்பு என்ற ஒன்று மட்டும்தான் அதிமுகவுக்கு தெரியும். சொந்தமாக சொல்ல அவர்களுக்கென வரலாறோ, சாதனைகளோ கிடையாது. பாஜகவின் அடிமை மட்டுமே அதிமுக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் பாதம் தாங்கியாக பழனிசாமி இருக்கிறார்.” என கடுமையாக சாடினார்.
செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்க்கு மாற்றம்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேரழிவாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் கணவர் சொன்னதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “என்னை இந்தி படிக்கவிட வில்லை என முடிந்து போனதை பற்றி கதை விடுகிறார் நிதியமைச்சர். ஜெயலலிதா பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கு, மணிப்பூர் பெண்களை பார்த்து ஏன் கண்ணீர் வரவில்லை. பிரதமர் மோடிக்கு மணிப்பூர் நினைவு வரவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு ஒப்புக்காக சில நிமிடங்கள் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். இது நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.” என்றார்.
திமுகவை பாஜக விமர்சிப்பதிலிருந்தே நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும். 2024இல் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அப்போது பேசினார்.