
திமுக அனல் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் (78) உடல் நல பாதிப்பால் நேற்றிரவு மரணமடைந்தார்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். திமுக தலைமை கழக பேச்சாளர். இவரது மனைவி சண்முகவடிவு (68). இவர்களுக்கு பாலசுப்ரமணி(45), முருகேசன் (38) ஆகிய மகன்களும், பழனியம்மாள் (48), ரத்தினம்(40), முத்துசெல்வி(30) ஆகிய மகள்களும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லீரல் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். அவரது உடல் நேதாஜி தெருவிலுள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கவுள்ளது.
இதைதொடர்ந்து அவரது உடலுக்கு, முன்னாள் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.