
தமிழகத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக செல்ல முடியாமல் இருக்கிறார். மனம் தளராமல் முதல்வரின் சாதனைகளை டிஜிட்டல் முறையில் ஐ.பேடில் வாக்காளர்களிடம் காண்பித்து, அதிமுக கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
டிஜிட்டல் தளத்தை, தேர்தல் களத்தில் சரியாகச் செயல்படுத்தி , அதிமுக அரசின் திட்டங்களையும், முதல்வரின் சாதனைகளையும் 90 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோவாக காண்பித்து, புரியும் படி தெளிவாகக் கூறி மக்களை அதிமுக தொண்டர்கள் கவர்ந்து வருகின்றனர். முதல்வரின் சாதனைகளை வாக்களர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்த்து வருகின்றனர் அதிமுக ஐ.டி. படையினர்.
கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. அதிக அளவில் பணப் பட்டுவாடா புகார் எழுந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், அதிமுக. கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனால் தற்போது முழுவதுமாக உடல் நலம் தேறியுள்ளார்.
இருப்பினும், தேர்தல் பிரசாரத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வராதது அதிமுக கட்சித் தொண்டர்களுக்கு ஒருவித சோர்வையே கொடுத்தது. ஆனால், மனம் தளராத தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளையும், அரசின் செயல்திட்டங்களையும் டிஜிட்டல் முறையில் எடுத்துக்கூறி வருகின்றனர்.
குறிப்பாக காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் நலனைக்காக்க முதல்வர் ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தியது, ஆட்சியின் 100 நாள் சாதனைகள் ஆகியவைகள் டிஜிட்டல் பாணியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து கட்சியின் தகவல்தொழில்நுட்ப குழுவின் செயலாளர் ஜி. ராமசந்திரன் கூறுகையில், " நடைபெறும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குறிப்பிட்ட அளவில் இளம் அதிமுக. தொண்டர்களை ஐ.பேட் மூலம் களம் இறக்கி இருக்கிறோம். இந்த ஐ.பேடில் அதிமுக அரசின் 100 நாள் சாதனைகள், முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சுகள், சாதனைகள் அடங்கிய குறுவீடியோக்கள், படங்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
டெல்டா பகுதியான தஞ்சையில் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் காவிரி விவகாரம் குறித்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரைப் பெற முதல்வர் ஜெயலலிதா நடத்திய சட்டப்போராட்டம், அரசின் முயற்சிகள் குறித்து வீடியோக்கள் உள்ளன. காவிரி இறுதித்தீரப்பை அரசிதழில் வெளிவரச்செய்தது முக்கியமாக எடுத்துரைக்கப்படுகிறது.
பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை விவசாயிகள் முதல்வருக்கு வழங்கியதும் இதில் உள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தியது, அங்கு நடக்கும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் என அனைத்தும் வீடியோ, ஆடியோ தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை மக்களுக்காக அவர் அறிவித்த திட்டங்கள், விலையில்லா பொருட்கள், பெண்களுக்கு அறிவித்த நலத்திட்டங்கள், மாணவர்களுக்கு இலவச மடிகணினி, சைக்கிள், என அனைத்து இந்த வீடியோவில் காட்டப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பினரையும் இணைக்கும் வகையில் இருப்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.
இன்றுள்ள நவீன தகவல் தொழில்நுட்ப சாதனைகளை ஆக்கப்பூர்வமாக கட்சியின் வளர்ச்சிக்கும், சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்கவும் அதிமுக கட்சி எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் இதேபோல், இன்பவுன்ட் கால்சேவையை அதிமுக அறிமுகம் செய்தது. அதன்படி, ஒரு தொண்டர் அதிமுக தலைமை அறிவித்துள்ள தொலைபேசி எண்ணுக்கு கால் செய்தால், அதில் இருந்து, முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் செய்தியும், பிரசாரத்தையும் கேட்கலாம். ஏறக்குறைய இந்த சேவை 30 லட்சம் வாக்களார்களை சென்றடைந்தது குறிப்பிடத்தக்குது.