திமுக ஆட்சியின் கனிமவள கொள்ளை... வேடிக்கை பார்க்கும் மு.க.ஸ்டாலின்...: அண்ணாமலை குற்றச்சாட்டு

By SG Balan  |  First Published Jun 27, 2024, 6:18 PM IST

தமிழகத்தில் மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.


தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை பற்றி திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும் எனவும் உடனடியாக மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

"தமிழகத்தில், மணல் கொள்ளையின் மூலம் சுமார் 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் தெரிய வந்தது. சட்டவிரோதமாக மணல் கொள்ளையடித்த விவகாரத்தில், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாகவும், தமிழக அரசு, மணல் கொள்ளை தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது.   தற்போது, அமலாக்கத்துறை, தமிழக காவல்துறை இயக்குனருக்கு எழுதிய ஜூன் 14 தேதியிட்ட கடித விவரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கடிதத்தில், சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே,  அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டதாகவும், பொதுப்பணித்துறை அனுமதி அளித்த இடத்தில், மணல் ஒப்பந்ததாரர்கள்  ராட்சத இயந்திரங்களை வைத்து சட்ட விரோதமாக மணல் அள்ளி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யார் இந்த நிகேஷ் அரோரா? சுந்தர் பிச்சை கூட நெருங்க முடியாது... இவரோட சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்ட நான்கு மணல் குவாரிகளில், ஒப்பந்ததாரர்கள் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளியிருக்கின்றனர். 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட இடத்தில், 105 ஹெக்டேர் அளவிற்கு மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக ஐந்து மாவட்டங்களில், 190 ஹெக்டேர் அளவில், 28 பகுதிகளில் மணல் அள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் அமலாக்கத்துறை தொழில்நுட்ப ரீதியாக, தெளிவான சாட்டிலைட் புகைப்படங்களை வைத்து மணல் அள்ளப்பட்டதற்கு முன்பாகவும், சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட பின்பும் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.  ஜிபிஎஸ் கருவிகள் கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், 273 மணல் இயந்திரங்களை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 நபர்கள், இந்த ராட்சத மணல் அள்ளும் இயந்திரத்தை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும், அமலாக்கத்துறை தனது கடிதத்தில், நான்கு நிறுவனங்களைக் குறிப்பிட்டு அதில் யார்- யாருக்கு மணல் அள்ளவும், மணல் எடுத்துச் செல்லவும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு அரசுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், மணல் ஒப்பந்ததாரர்களின் 130 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில், சுமார் 128 கோடி ரூபாய் மதிப்பிலான 209 மணல் அள்ளும் இயந்திரங்களையும் முடக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மணல் ஒப்பந்ததாரர்களின் 35 வங்கி கணக்குகளிலிருந்த, 2.25 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

முழுக்க முழுக்க அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியிருந்தார்கள். ஆனால், தமிழக அரசுக்குப் பேரிழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மணல் கொள்ளை தொடர்பாக,  திமுக அரசு இதுவரை, எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போதே, ஆட்சிக்கு வந்த அடுத்த பத்து நிமிடத்தில், திமுகவினர் மணல் கொள்ளை அடிக்கலாம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தனது கட்சிக்காரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, இன்று தமிழகத்தின் கனிம வளங்களைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, திமுக அரசு தவறி விட்டதாக அமலாக்கத்துறையே நேரடியாகக் கடிதம் எழுதியும், இன்னும் மூடி மறைக்கப் பார்க்கிறது திமுக.

கொள்ளை போனது கோபாலபுரத்தின் சொத்துக்கள் அல்ல, தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய தமிழகத்தின் கனிம வளங்கள் என்பதை, திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். உடனடியாக, மணல் கொள்ளையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது! ஒரே வாரத்தில் 4வது சம்பவம்... பீதியில் பொதுமக்கள்!!

click me!