சிறையில் இருந்து திட்டம்போட்டு திமுக பிரமுகரை கொன்றவர்கள் கைது…

First Published Dec 22, 2016, 8:01 AM IST
Highlights


விழுப்புரம்,

பழிக்குப்பழி வாங்கும் நோக்கில், விழுப்புரம் தி.மு.க. நகர செயலாளரை சிறையில் இருந்தபடியே திட்டம்போட்டு கொன்ற 4 ரௌடிகள் குண்டர் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரம் கே.கே.சாலை கணபதி லே–அவுட்டில் வசித்து வந்தவர் செல்வராஜ் (44). இவர் விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளர். கடந்த செப்டம்பர் மாதம் 14–ஆம் தேதி காலை தனது ஆதரவாளர்கள் சிலருடன் விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி குடியிருப்பு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கும்பல், செல்வராஜை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிப் படுகொலைச் செய்தது.

இதுகுறித்து விழுப்புரம் நகர காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்த ரௌடி பத்தர்செல்வம் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக கடலூர் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதியான விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த பிரபல ரௌடி இருசப்பன் அதே சிறையில் இருக்கும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் தனசேகர் உதவியுடன் அவரது ஆதரவாளர்கள் மூலம் செல்வராஜை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருசப்பன், தனசேகர், விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த அசாருதீன் என்கிற இமாம்அலி (27), அப்பு என்கிற கலையரசன் (27), காஞ்சீபுரம் மாவட்டம் சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் (27), திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்குமார் (27) உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் அசாருதீன், அப்பு, தியாகு, அருண்குமார் ஆகியோர் மீது விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. தொடர்ந்து இவர்கள் 4 பேரும் ரௌடியிச செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் பரிந்துரை செய்துள்ளார்.

இதனையடுத்து அசாருதீன் உள்பட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி காவல் சூப்பிரண்டுக்கு ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் காவல் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் அறிவுரைப்படி அசாருதீன் உள்பட 4 பேரையும் நேற்று விழுப்புரம் நகர காவலாளர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், அவர்களை கடலூர் மத்திய சிறையில் ஒரு வருடம் அடைக்கின்றனர்.

click me!