
சேகர் ரெட்டி, சீனவாசலு புழல் சிறையில் அடைப்பு
வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு ஆகியோரை ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை தியாகராயநகர் பசுல்லா ரோட்டில் வசிப்பவர் சேகர்ரெட்டி (வயது 46). இவர் கான்டிராக்ட் தொழில் செய்கிறார். மத்திய மாநில அரசுப்பணிகளை கான்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். திருப்பதி தேவஸ்தான போர்டில் இவர் உறுப்பினராக இருந்தார். தமிழகத்தில் இவர் முக்கியப்புள்ளியாக வலம் வந்தார்.
சமீபத்தில் இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இவரது நண்பர்கள் சீனிவாசரெட்டி, பிரேம் ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.
இதில் ரூ.131 கோடி ரொக்கமும், 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் முறைகேடாக இந்தப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வங்கிகளிடமிருந்து முறைகேடாக ரூ.34 கோடி மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கியது குறித்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர். சேகர்ரெட்டி முறைகேடாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டாரா? என்பதுபற்றி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், சேகர்ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் சீனிவாசரெட்டி, பிரேம் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. போலீசார் நேற்று முன்தினம் முறையாக வழக்குப்பதிவு செய்தனர். லஞ்ச ஊழல் சட்டப்பிரிவு, கூட்டுசதி உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று சேகர்ரெட்டி, சீனிவாசரெட்டி, பிரேம் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்தனர். அவர்களிடம் சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் மாலையில், சேகர்ரெட்டி, சீனிவாசரெட்டி, ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சேகர்ரெட்டியும், சீனிவாசரெட்டியும் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விஜயலட்சுமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் ஜனவரி 3-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சேகர் ரெட்டியும், சீனிவாசலு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.