பணத் தட்டுப்பாட்டல் வெடிக்கும் போராட்டங்கள்; வங்கி அதிகாரிகள் திணறல்…

First Published Dec 22, 2016, 7:52 AM IST
Highlights


தியாகதுருகம்

வங்கியில் பணம் வழங்கப்படாமல், பணம் தீர்ந்து விட்டது என்று மக்களிடம் கூறினால் உடனே அந்த இடத்தில் போராட்டம் வெடிக்கிறது. மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் திணறுகின்றனர்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் மோடி அறிவித்தார். மேலும், அதற்கு பதில் புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் எனவும் அறிவித்தார்.

புதிய ரூபாய் நோட்டுகளை போதுமான அளவுக்கு ரிசர்வ் வங்கி வெளியிடாததால் பொதுமக்களுக்கு தேவையான பணத்தை வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க மத்திய அரசு கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது. நாள்தோறும் 2000 ரூபாய்க்காக ஏ.டி.எம் முன் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கும், வங்கிகளுக்கும் பொதுமக்கள் படையெடுத்து சென்றாலும், அங்கும் பணம் பெற முடியவில்லை.

இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகள் முன்பு பொதுமக்கள் மறியல், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தியாகதுருகத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக அப்பகுதி மக்கள் நேற்று காலை 8.30 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனையடுத்து ஒரு சிலருக்கு மட்டும் வங்கியில் இருந்து பணம் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. கேட்டால் பணம் தீர்ர்ந்துவிட்டது என்று அலட்சிய பதில் மட்டுமே வங்கி அதிகாரிகளிடம் இருந்து வருகிறது. இதனால் சினம் கொண்ட பொது மக்கள் அங்குள்ள சென்னை – சேலம் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது காவலாளர்கள், “வங்கியில் போதுமான பணம் இல்லாததால் அனைவருக்கும் வழங்க முடியவில்லை. வங்கி அதிகாரிகள் விழுப்புரத்தில் உள்ள வங்கிக்குச் சென்று பணம் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன், தங்களுக்கு பணம் வழங்கப்படும்” என்று கூறி, அவர்களுக்கு பணம் பெறுவதற்கான டோக்கனை காவலாளர்கள் வழங்கினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டோக்கன் வாங்கிவிட்டு, மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

click me!