அடுத்த 45 நாட்கள் முக்கியமானது.! பாஜக அதிமுகவை வீழ்த்த ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்

Published : Jul 03, 2025, 01:37 PM IST
stalin dmk

சுருக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பரப்புரை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 2 கோடி வாக்காளர்களை இணைக்கவும், திமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். 

Oraniyil tamil nadu DMK election campaign : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 முதல் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. எதிர்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடன் கூட்டணி முறித்துக்கொண்ட அதிமுக, மீண்டும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளையும் தங்கள் அணியில் இணைய காய் நகர்த்தி வருகிறது. அதே நேரம் நடிகர் விஜய்யும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அரசியலில் இறங்கியுள்ளார். திமுக மற்றும் பாஜக தான் தனது எதிரி என அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் திமுக- அதிமுக

இதே போல ஆளுங்கட்சியான திமுக, பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. தனது கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த கூட்டணிக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டாலும் கூட்டணியில் எந்தவித பிளவும் ஏற்படாமல் திமுக பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து திமுக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்த பிரச்சாரத்தை துரிதப்படுத்தியுள்ளது. அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிடுவதாக விமர்சித்து வருகிறது.

ஓரணியில் தமிழ்நாடு

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100% சந்தித்து, திமுகவின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளது.  தமிழகம் முழுவதும் 2 கோடி வாக்காளர்ளை திமுகவில் இணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணி மற்றும் பரப்புரை இயக்கத்தை மேற்கொள்ளும் போது திமுக அரசின் சாதனைகளையும்,திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு வாக்காளரையும் ஓரணியில் தமிழ்நாடு என்று பிரச்சார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
  • மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?
  • மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றிலிருந்து தமிழ்நாடு மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா?
  • டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் முதலமைச்சர் தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?
  • இவை அனைத்தும் சாத்தியப்பட மற்றும் நிலையான ஆட்சியினை வழங்கிட அனுபவமிக்க மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா?
  • அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும் தங்கள் குடும்பமும் 'ஓரணியில் தமிழ்நாடு' என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா?

போன்ற கேள்விகள் ஆம்/இல்லை என்ற வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டு பரப்புரை இயக்கத்தை திமுகவினர் தொடங்கியுள்ளனர். மேலும் ஓரணியில் தமிழ்நாடு என இணைந்திட 9489094890 என்ற எண்ணில் அழைக்கலாம் என்றம் திமுக தலைமை தெரிவித்துள்ளது. 10 மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வர இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை பணியை மினி தேர்தல் பரப்புரையாக ஒவ்வொரு வீடு வீடாக சென்று பணியை மேற்கொள்கிறது திமுக.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கிய திமுக

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று மக்களை நேரில் சந்தித்து திமுக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி ஓரணியில் தமிழகம் என்ற பரப்புரையை தொடங்கினார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதவில், தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!