பாமக - பாஜக கூட்டணியைக் கண்டு திமுக அதிமுகவுக்கு பெரும் அச்சம்.. தொண்டர்களை ஊக்கப்படுத்தும் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Apr 2, 2024, 1:45 PM IST
Highlights

தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அதிமுகவையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். 

தமிழ்நாட்டு அரசியல் என்பது அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து காதல் பாட்டு பாடும் களமல்ல என  ராமதாஸ் கூறியுள்ளார். 

பாமக நிறுவனர் கட்சித் தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவை அடுத்து ஆட்சி செய்வது யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான 18ஆம் மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவிருக்கும் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டன. இன்னும் 15 நாட்களில் பரப்புரை நிறைவடைந்து, வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அதில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத இபிஎஸ் எதுக்கு அதிமுகவிற்கு தலைமை ஏற்குறீங்க? வச்சு விளாசும் கே.சி.பழனிசாமி!

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை கடந்த 24ஆம் நாள் விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கோவடி கிராமத்தில் தொடங்கிய நான், இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள  ஏழு தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறேன். பரப்புரைக்கு செல்லும் இடங்களிலும், செல்லும் வழிகளில் இளைப்பாறும் இடங்களிலும் உங்களின் உழைப்பை நான் எனது கண்களால் காண்கிறேன்; ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தந்தை என்ற நிலையைக் கடந்து, கட்சியின்  நிறுவனராகவும், உங்களை வழிநடத்தும் தலைவனாகவும்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாம் வென்று விட்டோம் என்ற அறிவிப்பு ஜூன் 4ஆம் நாள் வெளியாகும் போது, நமது உள்ளங்களில் இருந்து வெடித்துக் கிளம்பும் மகிழ்ச்சிப் பெரு வெள்ளத்திற்கு முன்னோட்டமாகவே இதை நான் கருதுகிறேன்.

உனது உழைப்பைப் பற்றிக் கூற வேண்டுமானால், களத்தில் எங்குமே பாட்டாளி இளைஞர்களையும், இளம் பெண்களையும் என்னால் காண முடியவில்லை. மாறாக, எங்கெங்கு நோக்கினும், உங்களுக்கு நான் முன்னுதாரணமாகக் காட்டிய தேனீக்கள், எறும்புகள், தூக்கணாங்குருவிகள் ஆகியவற்றையே நான் பார்க்கிறேன். அந்த உயிரினங்கள் இனி ஆய்வுக் கூட்டம் நடத்தினால், பாட்டாளி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் போன்று உழைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி பேசும் அளவுக்கு உன் உழைப்பு உள்ளது. உள்ளபடியே, தமிழ்நாட்டின் கள நிலைமை மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கிறது. 

பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத்  தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அதிமுகவையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம். பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாக நாம் தேர்தல் களம் காண்கிறோம்.

இதையும் படிங்க:  வேலூர் சிஎம்சியில் துரை தயாநிதி.. உடல்நிலை எப்படி இருக்கிறது? திடீரென நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்!

நாம் பொது வாழ்க்கைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாட்டில் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள உழைக்கும் பாட்டாளி மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகத் தான் நான் பொதுவாழ்க்கைக்கு வந்தேன். வன்னியர் சங்கத்தில் தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மொத்தம் 34 அமைப்புகளை நான் தொடங்கியிருக்கிறேன். எனது வாழ்வில் நான் காணாத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியில் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் வரை எத்தனையோ பதவிகளை நாம் வென்றெடுத்திருக்கிறோம். அவை எதுவும் எனக்குப் பெரியதாக தோன்றவில்லை. இந்தத் தேர்தலில் 10 இடங்களையும் வெல்ல வேண்டும் என்பதே இனிக்கும் இலக்காக என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை சாத்தியமாக்க வேண்டியது உங்களின் கடமை ஆகும்.

தமிழ்நாட்டு அரசியல் என்பது அதிமுக, திமுக ஆகிய இரு மரங்களை மட்டுமே சுற்றி சுற்றி வந்து  காதல் பாட்டு பாடும் களமல்ல. மாறாக, அது மாவோவின் பேரணிவகுப்புக்கு  இணையான பெருவெளி என்பதை நிரூபிக்கவே நாம் இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம். 1980ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கியதிலிருந்தே பாட்டாளிகளின் உழைப்பை நான் பார்த்து வருகிறேன். என்னுடன் களமிறங்கியவர்கள் அனைவரும் இப்போது 50 வயதையும், 60 வயதையும் கடந்தவர்களாகி விட்டனர். அவர்களுக்கு அடுத்தத்தடுத்த தலைமுறையினரான நீங்கள் களத்துக்கு வந்து விட்டனர். முந்தைய தலைமுறையினர் உடலால் தளர்ந்தாலும் மனதால் தளராமல் உங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளனர்.

இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க  வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் நாம் எப்போதெல்லாம் வலிமையாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழ்நாடும் வலுவாக உள்ளது. நாம் வலுவிழக்கும் போது தமிழ்நாடும் வலுவிழக்கிறது. கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்பது தான் இத்தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதற்கு காரணம், வேறொருன்றுமில்லை. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. - பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு - புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். அந்த ஆதரவின் உதவியுடன் தமிழ்நாடு - புதுவையில் 40 இடங்களிலும்  தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும் என தெரிவித்துள்ளார்.

click me!