சனாதனம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து, இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பிரதமர் மோடி உள்பட, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்கள் பேசிய கருத்துக்கள் பின்வருமாறு..
மயிலாடுதுறையில் உள்ள தருமை ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு வந்திருந்த பக்தர்கள் பலர் பிரேமலதா விஜயகாந்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அவர். ஆதீனம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் சனாதனத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது.
அரியலூரில் பிரபல ரவுடி பூச்சி சுதாகர் வெட்டிக் கொலை: முன்விரோதத்துக்கு பழிதீர்த்த எதிரிகள்!
சனாதனத்தை ஒழிப்பதற்கு மாநாடு போடவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. வறுமை, லஞ்ச ஊழல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. முதலில் டாஸ்மார்க் கடைகளை ஒழிக்க வேண்டும், தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
இதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக இந்தியாவின் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாட்டை கொண்டு வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் வரவேற்போம். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளில், முக்கியமாக திமுக அடுத்த தேர்தலுக்கான ஆதாயத்தை தான் தேடுகிறது. அடுத்த தலைமுறைக்கான அரசியலை திமுக செய்யவில்லை.
தேர்தலுக்காக உடனே சனாதனம் என்று சொல்கிறார்கள், இதனால் நமக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார் பிரேமலதா. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே எந்த பாகுபாடும் பிரிவினையும் கிடையாது. தேர்தல் ஆதாயத்திற்காக சனாதனம் என்ற வார்த்தையை சொல்லி பிரித்தாலும் சூழ்நிலையை திமுக உண்டாக்குகிறது என்றார் அவர்.
இளைஞரான உதயநிதி புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார் அவரிடம் இளைஞர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள் ஆனால் பழைய அரசியலை கையில் எடுக்கிறார். நூறாண்டு காலத்திற்கு முன்பே பெரியார் ஜாதி மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதை செய்யவில்லை. அனைத்தும் கண்துடைப்பு, தேர்தல் வந்துவிட்டால் சனாதனத்தை உயர்த்தி பேசி பத்து நாட்களுக்கு விவாதங்கள் நடத்துவார்கள்.
இதனால் நாட்டுக்கோ, மக்களுக்கோ என்ன பலன் என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா பிரித்தாலும் சூழ்ச்சி செய்து மக்களிடையே பாகுபாட்டையும் வேறுபாட்டையும் ஏற்படுத்தி ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை திசை திருப்பி குழப்பம் விளைவிக்கும் செயல் இது என்று கூறினார். பாராளுமன்ற தேர்தலுக்கு உரிய நேரத்தில் எங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மக்களின் ரத்தத்திலும் உணர்வுகளிலும் இந்தியா என்ற வார்த்தை ஊறிப் போய் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு நாட்டினுடைய பெயரை மாற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
இந்தியாவுல இருக்கோம்... எந்த பெயர் யார் வச்சாங்கன்றது தேவையில்லாத ஆணி - நடிகர் சித்தார்த் கோபம்