தீபாவளி போனஸ் கேட்டு அரசு இரப்பர் கழகத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்…

First Published Oct 14, 2017, 9:17 AM IST
Highlights
diwali Bonus Government Rubber Board workers wait for second term


கன்னியாகுமரி

தீபாவளி போனஸ் கேட்டு அரசு இரப்பர் கழகத் தொழிலாளர்கள் கன்னியாகுமரியில் நேற்று 2-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அரசு இரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீத போனஸ் மற்றும் 10 சதவீத கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், போனஸ் குறித்து இரப்பர் கழக நிர்வாகம் எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

அதனால், கன்னியாகுமரி மாவட்ட அரசு இரப்பர் கழக அனைத்துத் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழுச் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு இரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலை முதல் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் வல்சகுமார் தலைமஸ்வகித்தார். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

மற்றும் நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது இரப்பர் கழக தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் தொடர்பாக வல்சகுமார், “அரசு இரப்பர் கழக அதிகாரி எங்களுடன் பேசினார். அப்போது இரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு இன்னும் போனஸ் அறிவிக்கவில்லை என்றார். போனஸ் தொடர்பான அரசு உத்தரவு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாவட்டத் தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. நிர்வாகி சுகுமாரன், பி.எம்.எஸ். அன்னை சோனியா ராகுல் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார். அவர் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினார்.

இரப்பர் கழக நிர்வாக இயக்குனர் அலுவலக வளாகத்திலேயே உணவு சமைத்து தொழிலாளர்களுக்கு பரிமாறப்பட்டது.

click me!