காவல்துறையினர் உழைப்புக்குக் கிடைக்கும் பரிசு பணிநீக்கமா? கொந்தளிக்கும் அண்ணாமலை!

By SG Balan  |  First Published Jan 3, 2024, 10:14 PM IST

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வந்தனர் என்று அண்ணாமலை சொல்கிறார்.


தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் வேண்டுகோள்' என்ற தலைப்பில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tap to resize

Latest Videos

"மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி சாதனைகளை, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் வண்ணம், தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெறுகிறது. இந்த நடைபயணத்தில், பாஜக சகோதர சகோதரிகள் மட்டுமல்லாது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பும் சாதாரண பொதுமக்களும் மாற்றுக் கட்சியினரும் கூட பெரும் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் மக்களின் பேராதரவும், பாரதப் பிரதமர் மீது மக்கள் கொண்டுள்ள பேரன்பும் வெளிப்படுவது, ஊழல்வாதிகளுக்கும், குடும்ப அரசியல் நடத்தும் குறுநில மன்னர்களுக்கும் நடுக்கத்தைக் கொடுத்திருப்பது வெளிப்படை.

என் மண் என் மக்கள் நடைபயணத்திற்கு இடையூறு செய்ய, ஆளுங்கட்சி பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதும், மக்களின் பேராதரவால் அவை தொடர்ந்து பிசுபிசுத்துப் போவதும் தொடர்கதையாகி இருக்கிறது.

முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விண்கலம்!

இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் நடந்த என் மண் என் மக்கள் நடைபயணத்தின்போது, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதாகக் கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜேந்திரன் மற்றும் திரு. கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக காவல்துறை.

என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் சாதனை குறித்த விவரங்களையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களையும் துண்டறிக்கைகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், மேலும், தமிழக பாஜகவில் இணைய விருப்பமுள்ளோருக்கு உதவவும், பாஜக சகோதர சகோதரிகள் ஆங்காங்கே சிறு தளங்கள் அமைத்திருப்பது வழக்கம்.

குறிப்பிட்ட தினத்தன்று, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை, அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், யில் இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.

தமிழகக் காவல்துறையினரைப் பொறுத்தவரை, உலக அளவில் எந்த நாட்டுக் காவல்துறையினருக்கும் சற்றும் குறைவில்லாத திறமையுடையவர்கள். பொதுமக்களைக் காக்கும் பணியில் ஓய்வு, உறக்கமின்றி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறவர்கள். இயற்கைப் பேரிடர்கள் காலத்தில் கூட தன்னலமின்றி களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறவர்கள் என்பதை சமீபத்திய சென்னை மற்றும் தென்மாவட்ட கனமழை நேரத்தில் கூட கண்டோம். தமிழகக் காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டிராவிட்டால், தமிழகம் நிச்சயம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால், அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது, கீழ்மட்ட நிலையிலுள்ள காவல்துறை சகோதரர்களே.

பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில், காவல்துறையினர் விசாரிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், அதற்காக, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்களை, எந்த விசாரணையும் இன்றி பணியிடை நீக்கம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இரு உதவி ஆய்வாளர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினரையும், அவர்களைச் சார்ந்தவர்கள் அனைவரையுமே இந்த நடவடிக்கை பாதிக்கும்.

பல கனவுகளோடு சீருடை அணிந்து, இத்தனை ஆண்டுகளாகத் தங்கள் கடமையில் சிறிதும் தவறாது பொதுமக்களுக்காக உழைத்தவர்களுக்குக் கிடைக்கும் பரிசு, பணி நீக்கம் என்றால், இளைஞர்கள் நாளை காவல்துறைப் பணியில் சேர எப்படி முன்வருவார்கள்? காவல்துறை சகோதரர்கள் மீதான இது போன்ற கடுமையான நடவடிக்கைகள், இளைஞர்களிடயே காவல்துறைப் பணிக்கான வேட்கையை அற்று விடும்.

பல ஆண்டுகளாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த தங்கள் பணிகளைத் திறம்படச் செய்து கொண்டிருக்கும் திரு. ராஜேந்திரன் மற்றும் திரு கார்த்திகேயன் ஆகிய இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீதான இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மிக அதிகபட்சமானது என்பதால், தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், தயவு செய்து அவர்கள் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

விர்சுவல் ரியாலிட்டி வீடியோ கேமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 'அவதார்கள்'

click me!