
தமிழக அரசுடனான பேச்சுவாரத்தையில் உடன்பாடு எட்டப்டாத நிலையில், ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தமிழக அரசிடம் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படாத நிலையில், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தம் செய்வதாக முடிவு எடுத்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியே வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அண்ணா தொழிற்சங்க பேரவையும் தனியே வேலைநிறுத்தம் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறது.