
திருநெல்வேலி
காலம் மாறும்போது தினகரன் சிறையில் இருந்து வெளியில் வந்து அதிமுகவை கட்டிக்காப்பார் என திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணி திருநெல்வேலி மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணைத் தலைவர் சாமி தலைமை வகித்தார். அருண்குமார், மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்குமார் வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியது:
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அதை வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவர் மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி நடந்து வருகிறது. 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தைக் கட்டிக் காக்க டி.டி.வி.தினகரன் வந்தார். அவர் மீது டெல்லி காவலாளர்கள் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விட்டனர்.
தற்போது தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவி வருகிறது. கலாச்சார யுத்தம் நடந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி கால் ஊன்ற முயற்சி செய்கிறது.
டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு பணம் கொடுக்க முயற்சி செய்தார் என வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் யாருக்கு பணம் கொடுத்தார்? என குறிப்பிடவில்லை. தினகரன் மீது போடப்பட்டு உள்ள வழக்கை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். காலம் மாறும்போது தினகரன் சிறையில் இருந்து வெளியில் வருவார். அவர், அதிமுகவை கட்டிக்காப்பார்” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோரும் பேசினர்.
மேலும், முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கணேசன், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வி.கே.பி.சங்கர் செய்திருந்தார்.