
பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஐஜி ரூபா இன்று தனது இரண்டாவது அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவருக்கு கூடுதலாக சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிறை நிர்வாகம் தொடர்ச்சியாக இதனை மறுத்து வந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி யாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ரூபா, பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீரென ஆய்வு செய்து பல முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.
அதில் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் சசிகலாவுக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்வது, அதிகப்படியான பார்வையாளர்களை அனுமதித்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் சிறைக்குள் பார்வையாளர்களை அனுமதித்தது, உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது என்று ரூபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இதில் சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ரூபா பேட்டி அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் டிஐஜி ரூபா இன்று தனது அடுத்த அஸ்திரத்தை வீசப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சில ஆதாரங்களை ரூபா இன்று சத்ய நாராயணாவிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
தான் சிறையில் ஆய்வு செய்தபோது சிறிய கேமரா மூலம் அங்கு இருந்தவற்றை படம் பிடித்தாகவும், அது தொடர்பான அறிகைகையை ரூபா இன்று 2 ஆவது அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது..
மேலும் சிறையில் நடந்த முறைகேடுகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானதாகவும், ஆனால் அந்த பதிவுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போன்று சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்க்கென தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது குறித்தும் ரூபா டிஐஜி இன்று பரபரப்பு தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.