
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் குடிபோதையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றவரை காவலாளர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளை உள்ளது. இந்த வங்கியுடன் ஏ.டி.எம். மையமும் இணைந்துள்ளது. இந்த மையத்திற்குக் காவலாளி யாரும் இல்லை.
நேற்று முன்தினம் இரவு இந்த ஏ.டி.எம் மையத்தின் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆனால் அது முடியவில்லை. நேற்று காலை வங்கிக்கு வந்த பணியாளர்கள் ஏ.டி.எம். மையத்தின் எந்திரம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அவர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவண்ணாமலை நகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவாளிபிரியா, ஆய்வாளர்கள் வெங்கடேசன் (நகர), முருகன் (கிழக்கு) மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்து சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். நள்ளிரவு 2 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்தை சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் இரும்பு கம்பியால் உடைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள்ளார்.
அந்த நபர் சுமார் 20 நிமிடம் வரை கம்பியால் எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் அவரால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. பின்னர் அந்த நபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார் இவையனைத்தும் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்தது.
இதனடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடிக்கும் முயற்சியில் காவலாளர்கள் ஈடுபட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து சுமார் ரூ.30 இலட்சம் தப்பியது.
இதுகுறித்த புகாரின் பேரில் நகர காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது திருவண்ணாமலை பே.கோபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா (45) என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் பெயர் ராஜா என்பதும், குடிபோதையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.